Slider 1
Slider 2
Slider 3

ஆதிகால சித்தர்கள் தந்த அற்புத அறிவியல்

சித்த மருத்துவம் என்ற உடனேயே பெரும்பாலானவர்களின் நினைவிற்கு வருவது ஏதாவது ஒரு மரத்தின் இலை, காய், வேர் அல்லது அந்த மாதிரி தாவர பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு சூரணம், லேகியம், அல்லது கஷாயம் தான். ஆனால் சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் இவை மட்டுமல்ல. இன்னும் ஏராளம் ஏராளம். பண்டைய சித்தர்கள் அவ்வளவு பொருட்களை பற்றி ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள்.

சித்தமருத்துவத்தில் பயன்படுத்த மூலப்பொருட்கள் தாவர பொருட்கள், விலங்கின பொருட்கள், மற்றும் தாது பொருட்கள் என்று வகைப்படுத்தலாம். தாவரப்பொருட்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். பால், நெய், கோரோசனை, மாட்டுக்கொம்பு, ஆட்டுக்கொம்பு போன்றவை விலங்கின பொருட்களுக்கு உதாரணம். இவற்றுள் பால், நெய் தவிர மற்றவை தற்பொழுது அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை.

மூன்றாவதாக வரும் தாதுப்பொருட்களை காரசாரங்கள், பாஷாணங்கள், உபரசங்கள் என்று மேலும் மூன்று பிரிவாக பிரிக்கலாம். சூடன், பூநீறு, வளையலுப்பு, கடல் நுரை போன்ற காரசாரங்களும், வீரம், துத்தம், கௌரி பாஷாணம், வெள்ளைப் பாஷாணம் போன்ற பாஷாணங்களும், காந்தம், துருசு, கல்நார், ஆமை, செம்மண் போன்ற உபரசங்களும் பண்டைய சித்தர்கள் நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. 

இந்த தாதுப்பொருட்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் நிலக்கரியும், பெட்ரோலும் உருவானதை போல இயற்கை என்ற ரசவாதியால் உருவாக்கப்பட்டவை. தாதுப்பொருட்கள் இம்மாதிரி சுரங்ககளில் இருந்து இயற்கையாக வெட்டி எடுக்கப்படுபவை அல்லது வைப்பு முறையில் செயற்கையாக தயாரிக்கப்படுபவை என இரண்டு வகையில் கிடைக்கின்றன.

இவ்வாறு கிடைத்த தாதுப்பொருட்களை மணல், தூசு, உலோக மூலகங்கள் போன்ற குற்றங்களில் இருந்து சுத்தம் செய்து, மூலிகை சாறுகளில் ஊறவைத்தல், நெருப்பில் புடமிடுதல், வேதித்தல் போன்ற முறைகளில் முறைப்படி பக்குவம் செய்து மூலிகை மருந்துகள் தயாரிக்கப்டுகின்றன. 

மருந்துப்பொருட்களின் வீரியம் மற்றும் தன்மையையும், அவை மனித உடலின் மீது உருவாக்கும் மாறுபாடுகளையும் சரியாக ஆராய்ந்து அறிந்த ரசவாதிகளான சித்தர்கள் சாதாரண கூட்டு மருந்துகள் தயாரிக்கும் முறைகளையும், காயகல்பம் போன்ற மிக உயர்ந்த மருந்துகளை தயாரிக்கும் முறைகளையும் இந்த உலகிற்கு தந்தனர். 

அவற்றை நாம் சரியாக கற்றுக்கொள்வோம் ! முறையாக பயன்படுத்துவோம் !! சித்தர் புகழ் சொல்வோம் !!!